குஜராத் மாநிலத்தில் பட்டியலின உள்ளாட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறி ஒரு போலி வீடியோ சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது.
குஜராத் மாநிலத்தின் போடாட் மாவட்டத்தில் பட்டியலின உள்ளாட்சி தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பதிவிட்ட நபர், “பட்டியலின உள்ளாட்சி தலைவர் ஒருவர் சாதி கொடுமையால் கொலை செய்யப்பட்டுள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலும் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன. எனவே எங்களை போன்று சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு நாளை என்ன நடக்கும் என்பதை கூறமுடியாது” எனப் பதிவிட்டிருந்தார்.
ஆனால் இந்த வீடியோவை ஆல்ட் நியூஸ் நிறுவனம் ஆராய்ந்து பார்த்தில் அது போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பரப்பப்பட்டுள்ள வீடியோ கடந்த 19ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் காவல்துறைக்கு தகவல் அளிப்பவர் கொலை செய்யப்பட்ட வீடியோவாகும். இதற்கும் பட்டியலின தலைவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
எனினும் குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் போடாட் பகுதியில் ஒரு பட்டியலின இளைஞரும், ஒரு பட்டியலின உள்ளாட்சி தலைவரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் பட்டியலின உள்ளாட்சித் தலைவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கும் தற்போது பதிவிடப்பட்டுள்ள வீடியோவிற்கும் தொடர்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.