இந்தியா

உன்னாவ் பெண் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

உன்னாவ் பெண் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

webteam

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உன்னாவ் இளம் பெண், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவ விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பாலியல் புகார் கூறினார். அதாவது அப்பெண் 16 வயதாக இருந்தப் போது வேலை குறித்து கேட்க சென்ற அவரை எம்.எல்.ஏ குல்தீப், பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகாரில் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காதததால் அப்பெண், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்ற அவரது தந்தை இறந்தார். அதற்கு சாட்சியாக இருந்தவரும் மர்மமான முறையில் இறந்தார். 

இந்நிலையில் அம்மா மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த அந்தப் பெண், தனது தாய், வழக்கறிஞர் மற்றும் உறவினருடன் காரில் ரேபரேலி-க்கு ஜூலை மாதம் 28 ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் உயிரிழந்தனர். மேலும் அப்பெண்ணும் வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்தனர். 

இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அந்தப் பெண்ணுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர, பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

இதற்கிடையே, லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அந்தப் பெண், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனை விடுதியில் ஒருவாரம் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.