ஆன்லைனில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாஹ்ரைச் (Bahraich) பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண் அவர். திருமணமாகாத அந்தப் பெண், கோரக்பூரில் வாடகைக்கு அறை எடுத்து, அரசு போட்டித் தேர்வுகளுக்காகப் பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், பிலாண் ட்புர் பகுதியில் வேறொரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த அறைக்கு வெளியே ரத்தம் வந்ததை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது குழந்தை பெற்ற நிலையில், அந்தப் பெண் இறந்து கிடந்தார். அவர் அருகில் கிடந்த செல்போனை போலீசார் பார்த்தனர். அதில் ஆன்லைன் வீடியோவில் குழந்தை பெறுவது தொடர்பான வீடியோ ஓடி முடிந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அவர் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, ’கோரக்பூரில் தங்கியிருந்து போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி எடுத்த வந்த சுமதி, கடந்த சில நாட்களுக்கு முன் பிலாண்ட்புர் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்துள்ளார். ஆன்லைன் வீடியோவை பார்த்து தனியாகக் குழந்தை பெற்றுகொள்ள அவர் முயற்சி செய்துள்ளார். இதனால் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. கர்ப்பத்துக்கு காரணமானவர் யார் என்பது விசாரித்து வருகிறோம்’’ என்றார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.