இந்தியா

“காங்கிரஸ் எம்.பிக்கள் குண்டர்கள் போல் நடந்து கொள்கின்றனர்”- ஸ்மிருதி இரானி

webteam

மக்களவையில் பாரதிய ஜனதா பெண் எம்.பி.க்களிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகள் போர்களம் போல காட்சியளித்தன. வன்முறையில் 47 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நாடாளுமன்ற மக்களவை கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் உரத்த குரலில் வலியுறுத்தினர்.

அப்போது, அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரி கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்த பதாகைகளையும் கைகளில் ஏந்தியபடி, பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்று காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதனால், ஆவேசமடைந்த பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்று அவர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே அவையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிருதி இரானி, பாரதிய ஜனதா பெண் எம்பிக்களிடம் காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் அநாகரிகமாக நடந்ததாகவும், கடந்த இரண்டு, மூன்று கூட்டத் தொடர்களில் குண்டர்கள்போல நடந்து கொண்டு, அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னை பாரதிய ஜனதா பெண் எம்பி தாக்கியதாக காங்கிரஸை சேர்ந்த ரம்யா ஹரிதாஸ் ஏற்கெனவே சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில், அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.