மத்திய அரசு ஊழியர்கள் கோப்புப்படம்
இந்தியா

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுமா? உறுதியாய் பதிலளித்த அமைச்சர்!

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் எண்ணம் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

PT WEB

குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், “சிவில் சர்வீஸ் பணிகளில், ஒரே சீரான தன்மையை உருவாக்க அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பணி ஓய்வு வயதை 60 வயதை எட்டும் வகையில் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளதா?” என பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம்

அதற்கு, “மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றியமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை” என இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

“இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?” என்ற கேள்விக்கு பதிலளித்த இணையமைச்சர், “பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்” என்றும் விளக்கம் அளித்தார்.

மக்களவை

கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ஓய்வு பெறும் வயதை வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 62 ஆக உயர்த்த உள்ளதாக தகவல்கள் பரவியது. இருப்பினும் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவராமல் இருந்த நிலையில், மத்திய அரசின் தரப்பில் தற்போது இதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.