பிரதான் மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ 6000 வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படும் என்று முந்தைய பாஜக அரசு பிப்ரவரியில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது. இந்தத் தொகை 3 தவணையாக தலா ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் தவணை வழங்குவதற்கான பணிகளும் அப்போது தீவிரமான நடைபெற்றது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களின் முதல் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், பிரதான் மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கு விரிவாக்கம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்தத் தகவலை தெரிவித்தார். இதன் மூலம், நாடு முழுவதும் 14.5 கோடி விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்று அவர் கூறினார். இதற்காக மொத்தம் ரூ87 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தோமர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மோடி அரசு முதல் ஒப்புதலாக பாதுகாப்புத்துறை தொடர்பான திட்டத்திற்கு கையெழுத்திட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நிதியில் கீழ் வழங்கும் பிரதமர் கல்வி உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித் தொகை 2000 ரூபாயிலிருந்து ரூ2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மாணவிகளுக்கான உதவித் தொகை ரூ2,250இல் இருந்து ரூ3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.