புதுடெல்லியில் குளோபல் ரோடு இன்ஃப்ராடெக் உச்சி மாநாடு & எக்ஸ்போ (GRIS) நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி, “சிறிய சிவில் தவறுகளும் மோசமான சாலை வடிவமைப்புகளும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தாலும், யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்தியாவில், சாலை விபத்துகள் தொடர்பாக நாம் பல முக்கியமான பிரச்னைகளை எதிர்கொள்வது நல்லதல்ல. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 4,80,000 சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதன் விளைவாக 1,80,000 பேர் இறக்கின்றனர். சுமார் 4,00,000 பேர் படுகாயமடைகிறார்கள்.
இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த உயிரிழப்புகளில், 66.4% சதவீதம் பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்.
இதில் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் மிக முக்கியமாக, திறமையான இளைஞர்களின் இழப்பு உண்மையில் நம் நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பாகும். இந்த விபத்துகள் அனைத்திற்கும் மிக முக்கியமான காரணகர்த்தாக்கள் சிவில் இன்ஜினீயர்கள்தான். நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை, ஆனால் 10 வருட அனுபவத்திற்குப் பிறகு, நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ஆனால், இதில் மிக முக்கியமானவார்கள் விரிவான திட்ட அறிக்கையை (DPR) உருவாக்குபவர்கள்தான்.
மேலும் ஆயிரக்கணக்கான தவறுகள் உள்ளன. இந்த அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன். இந்தியாவின் சாலை அடையாளங்கள் மற்றும் குறியிடும் அமைப்புகள் ஸ்பெயின், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை. சாலைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, 2030 ஆம் ஆண்டுக்குள் விபத்து விகிதங்களை 50 சதவீதம் குறைக்க வேண்டும்” என அவர் சுட்டிக்காட்டினார்.