சுங்கச்சாவடி புதிய தலைமுறை
இந்தியா

சுங்கச்சாவடிகளில் செல்லும் வாகனங்களுக்கு புதிய நடைமுறை.. நிதின் கட்கரி அறிவிப்பு!

ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Prakash J

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அவ்விடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதைக் குறைக்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஃபாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஃபாஸ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, வாகனங்களின் முன்பகுதியில் ஒட்டப்படும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு எண்ம முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. பின்னர், இந்த ஃபாஸ்டேக் முறை நாடு முழுவதும் 2021 முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபாஸ்டேக்கில் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கார், ஜீப் போன்ற வணிக ரீதியில் இல்லாமல் சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்காக ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது, 60 கி.மீ. வரம்புக்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் செலுத்தும் கட்டண முறையின் நீண்டகால கவலைகளை நிவர்த்தி செய்யும். 3 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட இந்த பாஸை சொந்த உபயோகத்துக்கான கார்கள், ஜீப்புகள், வேன்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம். வாங்கிய நாளில் இருந்து ஓராண்டு அல்லது 200 பயணங்கள் ஆகியவற்றில் எது முதலாவதாக வருகிறேதா, அதுவரை இந்த பாஸ் செல்லுபடியாகும். இந்த நடைமுறை மூலம் சுங்கசாவடிகளை வேகமாக கடந்து செல்லலாம். பயண நேரம் கணிசமாக குறையும். இதற்கான வசதிகளுடன் ராஜ்மார்க் யாத்ரா என்ற செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சக வலைத்தளங்களிலும் இவ்வசதியை பெறலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.