mansukh mandaviya
mansukh mandaviya twitter
இந்தியா

தொடரும் மாரடைப்பு மரணங்கள்: கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு மத்திய அமைச்சர் கொடுத்த அட்வைஸ்!

Prakash J

சமீபகாலமாக நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகியுள்ளன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள்கூட மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், கடந்த வாரம் நவராத்திரி விழாவையொட்டி குஜராத், மகாராஷ்டிரா உட்பட வடமாநிலங்களில் கர்பா நடனம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

கர்பா நடனம்

இதில் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி, அகமதாபாதில் 24 வயது வாலிபர் ஒருவர் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்தார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் முன்பாகவே இறந்துபோனார். மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோன்று காபட்வஞ்ச் என்ற இடத்தில், 17 வயது சிறுவனும் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. அன்றைய ஒருநாளில் குஜராத்தில் மட்டும் 10 பேர் கர்பா நடனம் ஆடியபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், அந்த வாரத்தில் மட்டும், கர்பா நடனம் ஆடியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி 600க்கும் மேற்பட்டோர் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து இருந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்பா நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக அந்நடன பயிற்சியின்போது 3 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில், கர்பா நடனத்தின்போது மாரடைப்பின் காரணமாக 10 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பாவ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் அண்மைக்காலமாக மாரடைப்பின் காரணமாக பலர் உயிரிழந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த அவர், அண்மைக்காலமாக மாரடைப்பின் காரணமாக, பலர் உயிரிழந்து வருவது குறித்து ஐ.சி.எம்.ஆர். அண்மையில் தீவிர ஆய்வை மேற்கொண்டு இருப்பதாக குறிப்பிட்டார். அதன்படி, தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்க அதீத உழைப்பு, அதீத ஓட்டம், அதீத உடற்பயிற்சி, அதீத ஜிம் பயிற்சி போன்றவற்றை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு தவிர்க்க வேண்டும் என ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.