இந்தியா

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார் எல்.முருகன்

JustinDurai
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்வானார்.
 
தமிழக பாஜக தலைவராக இருந்தவர் எல்.முருகன். கடந்த ஜூலை மாதம் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில், எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத மத்திய அமைச்சர்கள் அனைவரும், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்று விதி உள்ளது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
 
இந்நிலையில், எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக மத்தியப்பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்வாகியுள்ளார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான சான்றிதழ் வழங்கப்பட்டது.