ஜெய்சங்கர், டெரிக் ஓ பிரையன்,  twitter
இந்தியா

மாநிலங்களவை தேர்தல்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் போட்டி; மேற்குவங்கத்திலும் 6 பேர் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குஜராத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் கட்சி அம்மாநிலத்தில் 6 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Prakash J

மேற்கு வங்கத்தில் உள்ள 6 ராஜ்யசபா எம்பிக்கள் (டெரிக் ஓ பிரையன், டோலா சென், பிரதீப் பட்டாச்சார்யா, சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரி, சுகேந்து சேகர் ராய்) குஜராத்தில் உள்ள 3 ராஜ்யசபா எம்பிக்கள் (மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தினேஷ் ஜெமால்பாய் அனவாடியா, லோகன்ட்வாலா ஜுகல் சிங் மாதுர்ஜி) மற்றும் கோவாவில் உள்ள 1 ராஜ்யசபா உறுப்பினர் (வினய் டெண்டுல்கர்) என மொத்தம் 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ளது.

new parliament building

இதையடுத்து இந்த 10 இடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 13ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. லுசினோ ஃபலேரியா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இடத்திற்கும் ஜூலை 24ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், குஜராத் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக சார்பில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், மீதமுள்ள இரண்டு வேட்பாளர்களின் பெயரை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை தேர்தலுக்காக திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 6 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

அதில் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து ராய், சமீருல் இஸ்லாம், பிரகாஷ் சிக், சாகேத் கோகலே ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ராய் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.