இந்தியா

''மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்'' : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

webteam

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் “உலகிலேயே இந்தியாவில் தான் பிறப்பு விகிதம் அதிகம் இருப்பதாகவும், இது நமது பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  மக்கள் தொகை அதிகளவில் பெருகுவது நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதுடன் சமூக அமைதியையும் குலைப்பதாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என கூறினார். இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு விவகாரம் மதத்தோடு சம்பந்தப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார். மேலும் சீனாவுக்கு நிகராக இந்தியாவிலும் மக்கள் தொகை அதிகரித்துவிட்டதாகவும் அதே சமயம் அங்குள்ளதை விட பரப்பளவும் இயற்கை வளங்களும் இந்தியாவில் குறைவாகவே இருப்பதாகவும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சுட்டிக்காட்டினார்.