இந்தியா

”நீங்கள் ஒரு குடிகாரன்” - நிதிஷ் குமாரின் ஆவேச பேச்சும், பாஜக அமைச்சரின் கேள்வியும்!

JananiGovindhan

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்போதும் பொதுவெளியில் சர்ச்சைக்குறிய வகையில் எதையாவது பேசி, பலரது விமர்சனங்களில் சிக்குவது வழக்கமாகவே கொண்டிருப்பார்கள். அந்த வகையில் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவரில் ஒருவருமான கிரிராஜ் சிங் அண்மையில் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அண்மையில் பீகாரின் சப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாரயம் குடித்ததால் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநில மக்களை திடுக்கிடச் செய்திருக்கிறது. இந்த சம்பவம் பீகார் சட்டமன்றத்திலும் எதிரொலித்திருக்கிறது. அப்போது நிதீஷ் குமாரின் அரசுக்கு எதிராக பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

அப்போது அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரான சாம்ராட் சவுத்ரி, “நிதீஷ் குமார் தலைமையிலான பீகார் அரசுதான் மாநிலத்தில் கள்ளச் சாராய விற்பனையின் பின்னணியில் இருக்கிறது. அவர் மீது போலி மது அருந்தி பலியானவர்கள் குடும்பத்தினர் வழக்குப்பதிய வேண்டும்” எனவும் பேசியிருந்தார்.

இதனை கருத்தாக எடுத்துக்கொண்டு பாஜகவினர் நிதீஷ் குமாரின் அரசை சட்டப்பேரவையிலேயே சாடுவதை தவறவில்லை. பாஜகவினரின் இந்த கருத்து தாக்குதலை பொறுத்துக்கொள்ளாமல் போன நிதீஷ் குமார் சட்டமன்றத்திலேயே பொறுமித்தள்ளியிருக்கிறார்.

அதன்படி, (Sharabi ho gaye ho tum...) நீங்கள் ஒரு குடிகாரன் என பாஜக எம்.எல்.ஏவை பார்த்து நிதீஷ் குமார் ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் கடுப்பான பாஜகவினர், தங்களிடம் நிதீஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொதித்தெழுந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான கிரிராஜ் சிங், “பீகாரில் மதுபானங்கள் கடவுளாகவே மாறிவிட்டது. மாநிலத்தில் எங்கு காணினும் மது நீக்கமற நிறைந்திருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.

மேலும் சட்டமன்றத்தில் சப்ரா பலி குறித்து நிதீஷ் பேசியதை சுட்டிக்காட்டி, “10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படி நிதீஷ் பேசியதில்லை. அவருடைய புகழ் வீழ்ச்சியடைந்ததோடு வயசானதால் இப்படி கோபப்படுகிறார்” என கிரிராஜ் சிங் பேசியிருக்கிறார்.

முன்னதாக, பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து புதிய அரசை நிறுவிய நிதீஷ் ஆட்சியின் இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்தொடர்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.