இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு web
இந்தியா

இந்தியாவில் ஊரடங்கு வருமா..? வலம்வரும் செய்திகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்!

சிலிண்டர் தட்டுப்பாடு கட்டுக்குள் வராத நிலையில் மீண்டும் ஊரடங்கு வரப்போகிறது என்ற செய்தி பரவிவருகிறது..

Rishan Vengai

சிலிண்டர் தட்டுப்பாடு கட்டுக்குள் வராத நிலையில் மீண்டும் ஊரடங்கு வரப்போகிறது என்ற செய்தி பரவிவருகிறது..

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. சில நாடுகளில் மூன்று மடங்கு அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் எரிவாயுவில் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கான மாற்று வசதிகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. 

ஆனாலும் மறுபுறம் மக்களுக்கு சமயல் எரிவாயு சிலிண்டர் சரியான நேரத்தில் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரு நகரங்களில் இருப்பவர்களுக்கு சிலிண்டர் புக் செய்து 10-15 நாட்கள் கழித்தே சிலிண்டர் கைக்கு வரும் சூழல் நிலவுகிறது. ஒருபக்கம் தாமதமாக வரும் சிலிண்டர், மறுபக்கம் மூடப்பட்ட உணவகங்கள், விலை உயர்த்தப்பட்ட உணவுகள் என மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கச்சா எண்ணெய் - எல்பிஜி சிலிண்டர்

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க மின்சார அடுப்பை பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தாலும் சாமான்ய மக்களுக்கு அதை சாத்தியப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால், பல பகுதிகளில் விறகடிப்பை வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தசூழலில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு கம்பெனிகள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், மீண்டும் கொரோனா ஊரடங்கைப் போல ஊரடங்கு வரும் என்ற செய்தி வலம்வந்து கொண்டிருக்கிறது.

பரவும் செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு..

ஊரடங்கு வரும் என பரவும் வதந்திகளுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், உலகளாவிய சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சவால்களை இந்தியஅரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் தட்டுப்பாடு

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சமூகவலைதளங்களில் பரவி வரும் ஊரடங்கு குறித்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. அத்தகைய திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்படும் மாற்றங்களை அரசு உடனுக்குடன் கண்காணித்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்தியா முழுத் தயார் நிலையில் உள்ளது. இக்கட்டான நேரங்களில் பொதுமக்கள் அமைதியாகவும் பொறுப்புடனும் இருக்குமாறும், பீதியை ஏற்படுத்தும் விதமான வதந்திகளைப் பரப்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.