”வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலீடு செய்வது, கடன் கொடுப்பது ஆகியவை தொடர்பாக பிரத்யேக நிதிக் கொள்கையை வங்கிகள் வகுக்க வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்த்தலாவில் வங்கிகளுக்கான மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களின் கள யதார்த்தத்தம், மக்களின் நிலை ஆகியவற்றை மனதில் கொண்டு வங்கிக்கடன் வழங்குதல் தொடர்பான விதிகள் தளர்த்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடுத்த 10 ஆண்டுகளில் வடகிழக்குப் பிராந்தியம் 20 சதவீதம் என்கிற விகிதத்தில் வளர்ச்சி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வங்கிகள் தமது எதிர்கால வணிகத்துக்கான முதலீடுகளை மேற்கொள்ளச் சிறந்த இடம் வடகிழக்குப் பிராந்தியம்தான் என்றும் கூறினார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி இன்றியமையாதது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.