இந்தியா

காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்த 610 பேரின் சொந்த நிலங்கள் மீட்பு - உள்துறை அமைச்சகம்

Sinekadhara
காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்த 610 பேருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களது சொந்த இடங்கள் மீட்டு கொடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1985ஆம் ஆண்டு முதல் 1995 ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்த காஷ்மீர் பண்டிட்கள் அங்கிருந்த பிரிவினைவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். இதில் லட்சக்கணக்கான மக்கள் காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தனர். இவர்களை மீண்டும் அவர்களது சொந்த மாநிலத்தில் குடியமர்த்துவதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் விவரங்களைத் தருமாறு நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து மாநிலங்களவையில் பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 610 புலம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களது நிலங்கள் மீட்டுத்தரப் பட்டிருப்பதாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இத்தகைய புலம்பெயர் மக்களுக்காக 3000 மாநில அரசு வேலைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இவை தவிர சுமார் 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏராளமான புலம்பெயர் காஷ்மீர் மக்களுக்கான தங்கும் இடங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.