இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து சிரப்களையும் மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே இனி வாங்க முடியும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மருந்துகள் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, அவற்றின் நேரடிவிற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அசுத்தமான இருமல் மருந்துகளால் குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மருந்துகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாடு முழுவதும் இந்தப் புதிய விதிமுறையை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. இதன்படி, பொதுமக்கள் இனி எந்தவொரு மருத்துவ சிரப் வகைகளையும் மருத்துவரின் அதிகாரப்பூர்வ சீட்டு இல்லாமல் நேரடியாக மருந்துக்கடைகளில் விலைக்கு வாங்க முடியாது.
மேலும், வீட்டு உபயோக சாதாரண மருத்துவப் பொருட்களின் வரிசையில் இடம் பெற்றிருந்த 'சிரப்ஸ்' என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்த திரவ மருந்துகள் அனைத்தும், தற்போது கடுமையான மருந்து ஒழுங்குமுறைப் பட்டியலின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அனைத்து மருந்தகங்களிலும் இந்த விதிமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.