அமைச்சரவை மாற்றத்தில் தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் புரி உள்ளிட்ட 5 பேர் நீக்கப்பட்டு, 9 புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்மூலம் கூட்டணி சமநிலை, பிராந்திய பிரதிநிதித்துவம், அரசியல் செய்தி ஆகியவை மறுசீரமைக்கப்பட உள்ளன.
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், 5 பேர் நீக்கப்பட்டு 9 பேர் புதிதாக சேர்க்கப்படுவார்கள் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் புரி, ரவ்நீத் பிட்டு, பங்கஜ் சவுத்ரி, ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் நீக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
சிபிஎஸ்இ தேர்வு சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்பட்டு, அவரது துறை நிர்மலா சீதாராமனுக்கு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. நிர்மலா சீதாராமன் வகித்துவரும் நிதித்துறை, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸிடம் தரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, ஆம் ஆத்மியிலிருந்து வந்த ராகவ் சத்தா, திரிணாமுல் அதிருப்தி அணியைச் சேர்ந்த ககோலி கோஷ் தஸ்திதார், ராமாயணம் டிவி தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படும் என்றும் கூறப்படுகிறது. நிர்மலா சீதாராமன் தவிர ஜோதிராதித்ய சிந்தியா, பிரஹலாத் ஜோஷி ஆகியோரின் துறைகளும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசு 3ஆவது முறையாக ஆட்சியமைத்த பின் நடைபெறும் பெரிய அமைச்சரவை மாற்றமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. மோடியின் 12 கால ஆண்டு ஆட்சியில் 4 முறை பெரிய அளவில் அமைச்சரவை மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.