இந்தியா

கூட்டுறவுத் துறைக்கு புதிய அமைச்சகம்... மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்?

Veeramani

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கப்படும் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூட்டுறவுத் துறைக்காக புதிய அமைச்சகத்தை தோற்றுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு நரேந்திர மோடி, 2-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றப் பிறகு, மத்திய அமைச்சரவை இதுவரை மாற்றியமைக்கப்படவில்லை. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிரோன்மணி அகாலி தளம் விலகியது. அதேபோல சிவசேனாவும் கூட்டணியிலிருந்து வெளியேறியது. தற்போதைய நிலையில், ராம்தாஸ் அத்வாலே மட்டுமே, பாஜக அல்லாத அமைச்சராக உள்ளார்.

மத்திய அமைச்சர்களாக 81 வரை இருக்கலாம் என்ற நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்த்து 53 பேர் மட்டுமே உள்ளனர். உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று மத்திய அமைச்சரவையின் மெகா விரிவாக்கம் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஜோதிராத்ய சிந்தியா, அசாமில் இருந்து சர்பானந்த சோனாவால், மகாராஷ்டிராவில் இருந்து நாராயன் ரானே ஆகியோர் டெல்லி வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அனு பிரியா படேல், பீகாரை சேர்ந்த சுஷில் மோடி, ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது. இவர்களை தவிர லோக் ஜனசக்தி கட்சியின், ஐந்து எம்.பி.க்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள பசுபதி பாரஸ் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளை கவனித்து வருவதாலும், சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட், கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாலும், மத்திய அமைச்சர்களாக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோர் காலமானதாலும், மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கூட்டுறவு முறையை வலுப்படுத்தும் நோக்கத்தோடு கூட்டுறவுத்துறைக்கென தனி அமைச்சகத்தை தோற்றுவித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, இத்துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், தற்போது மத்திய அமைச்சரவையில் யாரும் இடம்பெறவில்லை. அதிமுக, தமாகா, பாமக கட்சிகளுக்கு நாடாளுமன்றத்திலேயே பிரதிநிதித்துவம் இருந்தாலும், மத்திய அமைச்சரவையில் இடம் கிடைப்பதற்கான சூழல் தற்போது இல்லை என கூறப்படுகிறது