கேரளா மாநிலம் மலையாள மொழியில் 'கேரளம்' என்று அழைக்கப்படுவதால், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இப்பெயரையே பயன்படுத்த வேண்டும் என அம்மாநில சட்டமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான கேரள அரசு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
அந்த தீர்மானத்தில், "மலையாளத்தில் நம் மாநிலத்தின் பெயர் கேரளம். 1956, நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், நவம்பர் 1ம் தேதி கேரள தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்றுபட்ட கேரளம் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்தே மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. கேரளம் என்ற பெயர், மாநிலத்தின் பாரம்பரியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் கேரா என்பது தென்னை மரத்தையும், ஆளம் என்பது நிலத்தையும் குறிக்கிறது. இந்த இரு சொற்களில் இருந்து உருவானதுதான் கேரளம். அதாவது, தென்னை மரங்களின் நிலம் என்று பொருளாகும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இந்த சூழலில் தான், இத்தீர்மானம் 2-வது முறையாக 2024-ம் ஆண்டு மீண்டும் கேரள மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மத்தியரசு கேரளம் என்னும் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் பரிந்துரையுடன் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். கேரள சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”கேரள மக்களுக்கு வாழ்த்துக்கள். பிரதமர் மோடி தலைமையிலான அரசு ”கேரளம்” என்னும் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, கேரள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக 1956 ஆம் ஆண்டு திருவாங்கூர் கொச்சின் என்ற பெயர், கேரளா என மாற்றப்பட்டது. 1959ஆம் ஆண்டு மத்திய பாரத் என்ற பெயர் மத்திய பிரதேசமாக மாறியது. 1969இல் மதராஸ் என்ற பெயர் தமிழ்நாடு என்றும், 1972இல் north - east frontier agency என்ற பெயர் அருணாசல பிரதேசம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1973இல் மைசூர் மாநிலம் கர்நாடகா என்றும், 2007இல் உத்தராஞ்சல் மாநிலம் உத்தராகண்ட் என்றும், 2011இல் ஒரிசா, ஒடிசா என்றும் பெயர் மாற்றப்பட்டது.