17 வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் மத்திய அமைச்சரவைக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது பாஜக அளித்த தேர்தல் அறிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல், ஜூன் 19-ம் தேதி மக்களவைக்கான சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஜூலை 4 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 17 வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே எப்போதும் மக்களுக்கே முதலிடம் அளிக்கப்படும் என அமைச்சரவை கூட்டம் குறித்து பிரதமர் மோடி டிவீட் செய்துள்ளார். மேலும் பாஜக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறு வணிகர்கள், கடை உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை செயல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.