மத்திய பட்ஜெட் PT Web
இந்தியா

மத்திய பட்ஜெட் | தாக்கல் செய்வதில் தமிழர்கள் சாதனை.. சில முக்கிய தகவல்கள்!

பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்தான சுவாரசிய தகவல்களைக் காண்போம்.

PT WEB

சுதந்திர இந்தியாவில் இதுவரை 88 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் முழுமையான பட்ஜெட்டுகள், தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டுகள் அடங்கும். தாக்கல் செய்யப்பட்ட 88 பட்ஜெட்டுகளில் 27, தமிழர்களால் சமர்ப்பிக்கப்பட்டவை என்பது வியப்புக்குரிய தகவல். வேறு எந்த மாநிலத்தவரும் இவ்வளவு முறை பட்ஜெட் தாக்கல் செய்ததில்லை. இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான்.

ஆர்.கே. சண்முகம் செட்டியார்

கோவையில் பிறந்தவரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் 1947 மற்றும் 1948ஆம் ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்தார். திருவள்ளூரைப் பூர்விகமாக கொண்ட டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1957இல் இருமுறை, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் தலா ஒரு முறை என 4 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். கோவை அருகே பொள்ளாச்சியைச் சேர்ந்தவரான சி.சுப்பிரமணியம் 1975, 1976ஆம் ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். தஞ்சாவூர் அருகே ராஜாமடத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981ஆம் ஆண்டுகளில் பட்ஜெட் சமர்ப்பித்துள்ளார்.

காரைக்குடியைச் சேர்ந்த ப.சிதம்பரம் 1996,1997, 2004, 2005, 2006, 2007, 2008, 2013, 2014 என 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து முதலிடத்தில் உள்ள நிலையில், ப.சிதம்பரம் 9 பட்ஜெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் தற்போது, மதுரையில் பிறந்தவரான நிர்மலா சீதாராமன், 2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 8 பட்ஜெட்டுகளை சமர்ப்பித்துள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கும் ப.சிதம்பரத்தின் சாதனையை சமன் செய்வார்.

அதேசமயம், இந்தியாவின் முதல் பட்ஜெட்டுக்கும் 2025ஆம் ஆண்டு போடப்பட்ட பட்ஜெட்டுக்கும் இடயே உள்ள வித்தியாசம் குறித்துப் பார்க்கலாம்.

1947இல் ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் வரவு 171 கோடி ரூபாயாகவும் செலவு 197 கோடி ரூபாயாகவும் இருந்தது. அதாவது, முதல் பட்ஜட்டே 26 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டாக அமைந்ததது. 2025இல் தாக்கலான பட்ஜெட்டில் செலவுகள் 50 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. கடன்கள் நீங்கலான வருவாய் 34 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. அதாவது, பட்ஜெட் பற்றாக்குறை 15 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. 1947-இல் பாதுகாப்புத் துறைக்கு 46% நிதி, அதாவது 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், 2025-இல் இது 6 லட்சத்து 81 ஆயிரம் கோடி அதாவது 8.5% ஆகக் குறைந்தது. 1947 பட்ஜெட்டின் பிரதான நோக்கம் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்துவது, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது ஆகிய 3 மட்டுமே. 2025ஆம் ஆண்டு பட்ஜெட் 2047இல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கியதாக இருக்கிறது.