இந்தியா

காலாவதியான வாகனங்களை உடைக்கும் நடைமுறை: மத்திய பட்ஜெட்டில் விளக்கம்

காலாவதியான வாகனங்களை உடைக்கும் நடைமுறை: மத்திய பட்ஜெட்டில் விளக்கம்

PT WEB

காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுவதாக மத்திய பட்ஜெட்டில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த தசாப்தத்தின் முதல் பட்ஜெட், டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்படும் முதல் பட்ஜெட் உள்ளிட்ட சிறப்புகளைப் பெற்ற இந்த பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

> ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இது ஒருங்கிணைந்த திட்டமாக அமல்படுத்தப்படும்.

> நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும்.

> காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

> கொரோனா தடுப்பூசி வழங்கலுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது.

> சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக, 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம்.



> ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம்.

> வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

> ரயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

> முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும்போது, அது 34.5 சதவீதம் உயர்வு.