இந்தியா

மும்பை பெண்களின் கழிப்பறை துயரங்கள்..!

Rasus

பொது கழிவறை வசதி இல்லாமல் மும்பை பெண்கள் பெரிதும் சிரமப்படுவது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக நகரங்களில் ஒன்றுதான் மும்பை. ஏகப்பட்ட தொழில் நிறுவனங்கள் இங்கு உள்ள நிலையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் இந்நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சிட்டிக்கு பெயர்போன மும்பையில் பெண்கள் பொது கழிப்பிட வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இருக்கும் கழிவறைகளிலும் போதிய வெளிச்சம் இருப்பதில்லை. அத்தோடு மட்டுமில்லாமல் கழிவறைக்குள் நுழைந்ததுமே மூக்கை பொத்திக் கொள்ளும் அளவிற்கு மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

பிரஜா அறக்கட்டளை மூலம் பொதுமக்களின் பிரச்னை குறித்த அறிய மும்பையில் உள்ள கழிவறைகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி மும்பை நகரத்தில் மொத்தமாக 14,687 பொது கழிவறைகள் இருக்கும் நிலையில் அவற்றில் 10,778 கழிவறைகள் ஆண்களுக்காக உள்ளன. வெறும் 3,909 பொது கழிவறைகளே பெண்களுக்காக உள்ளன. மும்பையில் மொத்தமாக கிட்டத்தட்ட 1 கோடியே 24 லட்ச மக்கள் வசித்து வரும் நிலயில் வெறும் 14,687 கழிவறைகளே உள்ளது பொதுமக்களை மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது.

மும்பையில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்லும் நேரங்களில் கிட்டத்தட்ட 45 முதல் 50 நிமிடம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. அப்படியிருக்க அவர்கள் பொது கழிவறையை பயன்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். மும்பையின் ஏ வார்டு பகுதியில் வேலை, படிப்ப உள்ளிட்ட விஷயங்களுக்காக மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இங்கு பொது கழிவறை வசதியை அதிகரிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. அத்துடன் இருக்கும் கழிவறைகளும் காற்றோட்ட வசதி இல்லாமல், போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. அதனையும் சுகாதாரமான கழிவறையாக மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.