குஜராத்
குஜராத் முகநூல்
இந்தியா

2 ஆண்டுகளில் 32 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைத்தது! குஜராத் அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி விவரம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்திருந்த படித்த இளைஞர்களில் கடந்த 2 ஆண்டுகளில் வெறும் 32 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைத்துள்ளது என்று குஜராத் மாநில அமைச்சர் கூறிய விளக்கம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் சூழலில், குஜராத் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அன்று (13.2.2024) காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு அம்மாநில தொழில்துறை அமைச்சர் பல்வந்த்சிங் ராஜ்புட் பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “கடந்த 2 ஆண்டுகளில் 2.38 லட்சம் கல்வி பயின்றவர்கள் வேலைக்காக பதிவு செய்த நிலையில் 32 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இவர்களில் 22 பேர் அகமதாபாத்தினையும், 9 பேர் பாவ்நகரிலும் 1 காந்திநகரிலும் ஒரே காலகட்டத்தில் அரசு வேலையை பெற்றுள்ளனர்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் உள்ள 29 மாவட்டங்களில் 2,38,978 பேர் படித்த பட்டதாரிகளும், 10,757 பேர் பகுதியளவு நேரம் கல்வி பயின்றவர்களும் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இப்படி மொத்தம் படித்து வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2,49,735 ஆகும்.

மேலும் ஆனந்த் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இதன்படி, ’ஆனந்த் மாவட்டத்தில் 21,633 பேர், வதோராவில் 18,732 பேர், அகமதாபாத்தில் 16,400 பேர், தேவபூமி துவாரகாவில் 2,362 பேர், ராஜ்கோட்டில் 13,439 பேர், ஜூனாகத்தில் 11,701பேர், பஞ்சமஹாலில் 12,334 பேர், சுரேந்திரநகரில் 12,435 பேர் மற்றும் தாஹோதில் 11,095 பேர்’ வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

மேலும், குஜராத் மாநிலத்தில் 46 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அலுவகங்கள் உள்ளன. அவை வேலை வாய்ப்புகளை உண்டாக்கி கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இது குறித்த தகவல்களை வழங்க ஒரு செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.