இந்தியா

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்தது- ஆய்வில் தகவல்

ச. முத்துகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.1 சதவிகிதத்தில் இருந்து 3.2 சதவிகிதமாக குறைந்திருப்பதாக இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்திய பொருளாதாரம் வேகமாக மீட்சியடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.60 சதவிகிதத்தில் 7.83 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக சி.எம்.ஐ.இ எனப்படும் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் நிறுவனம் கணித்துள்ளது.

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.28 சதவிகிதத்தில் இருந்து 9.22 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதேநேரம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.29 சதவிகிதத்தில் இருந்து 7.18 சதவிகிதமாக குறைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக, ஹரியானா மாநிலத்தில் வேலைவாய்பின்மை விகிதம் 34.5 சதவிகிதமாகவும், ராஜஸ்தானில் 28.8 சதவிகிதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 15.6 சதவிகிதமாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை குறைவாக உள்ள மாநிலங்களில் அசாம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. அதேநேரம், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமும் குறைந்திருக்கிறது.