15 முதல் 29 வயதுள்ள பிரிவில் வேலைவாய்ப்பின்மை 22.5 சதவிகிதமாக உள்ளது என தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை குறித்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், 2018-19-ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் இருபாலினத்தவருக்குமான வேலைவாய்ப்பின்மை 29 சதவிகிதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண்களை விட பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பின்மை 29 சதவிகிதமாகவும் ஆண்களுக்கு வேலைவாய்ப்பின்மை 20.9 சதவிகிதமாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ள மாநிலங்களில் 37.2 சதவிகிதத்துடன் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. குஜராத்தில்தான் மிகக்குறைவாக 9.5 சதவிகிதத்துடன் வேலைவாய்ப்பின்மை குறைந்த அளவில் உள்ளதும் தெரியவந்துள்ளது.