இந்தியா

முழுக் கட்டுமானத்துக்கு முன்பே இடிந்துவிழுந்த பாலம் - அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு

PT
பீகாரில் முழுக் கட்டுமானத்துக்கு முன் இடிந்த பாலத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அதில் எந்த வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
பீகாரில், புரி கன்டாக் ஆற்றைக் கடக்கும் வகையில்  ஷஹிபுர் கமல் என்ற இடத்தில் 206 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சாலை கட்டுமானத் துறையின் கீழ் சுமார் 13 கோடி செலவில், பென்குசராயைச் சேர்ந்த மா பக்வத்தி கன்ஸ்ட்ரக்‌ஷன் 2016-இல் பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கியது. பாலம் வேலைகள் முற்றிலும் முடிவதற்கு முன்பே, 2017-ல் அப்பகுதி மக்கள் அதை சில பணிகளுக்குப் பயன்படுத்த தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது

குறிப்பாக மூன்று கிராமங்கள் இணையும் அந்த பகுதியில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருவதால், பாலம் முறையாக திறக்கப்படவில்லை என்றாலும், அவசர போக்குவரத்துக்காக ஒருசில வாகனங்களில் செல்ல மட்டும் மக்கள் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. சென்ற வியாழக்கிழமை அன்றே அங்கு 2 மற்றும் 3 ஆம் தூண்கள் சேதமடைந்துள்ளன. அதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து துணைப் பிரிவு அதிகாரி ரோஹித் குமார் கூறுகையில், "தூண்கள் சேதமடைந்த பிறகு, போக்குவரத்தை நிறுத்தியதால் எந்தவித உயிர்ச் சேதமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். 
-ஷர்நிதா