இந்தியா

உடைக்க முடியாததால் ஏடிஎம்-மை பெயர்த்து எடுத்து தப்பிய கொள்ளையர்கள்!

webteam

மத்திய பிரதேசத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அதை பெயர்த்து எடுத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள சட்னா மாவட்டம் அமர்படானில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 1.47 மணிக்கு பொலேரோ காரில் சிலர் வந்தனர். ஏடிஎம் இயந்திரம் இருந்த இடத்தில் கேமராவை ஸ்பிரே அடித்து முடக்கினர். பின்னர் அதை உடைத்துப் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.  உடைக்க முடியவில்லை. இதனால் அதை அப்படியே பெயர்த்து எடுத்து, பொலேரோ காரின் பின்னால் கட்டினர். கார் அதை இழுத்துச்சென்றது. அந்த ஏடிஎம்-மில் 29.55 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்துக்கு சிறிது தூரத்தில் இருக்கும் கடையின் காவலாளி ஒருவர், ஏதோ நடப்பதாக சந்தேகப்பட்டு தனது கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். அவர் 100-க்கு போன் செய்து சொன்ன பின், போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பிவிட்டனர்.

‘எத்தனை பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. அதிகாலை 1.47 மணி வரை ஏடிஎம் செயல்பட்டிருக் கிறது. பிறகுதான் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அக்கம் பக்கத்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்ற வாளிகளைத் தேடி வருகிறோம்’ என்று அமர்படானி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.