இந்தியா

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை: தூய்மை இந்தியா திட்டத்தை நிராகரித்த ஐநா

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை: தூய்மை இந்தியா திட்டத்தை நிராகரித்த ஐநா

webteam

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை தொடர்வதால் தூய்மை இந்தியா திட்டத்தை ஐநா சபை நிராகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஸ்வச் பாரத் அபியான்’ என்ற தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுகின்ற கொடுமையை அகற்ற முடியவில்லை என்று ஐநா சபை கூறியுள்ளது. பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை 2014 ஆம் ஆண்டு தொடங்கினார். 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மையான நாடாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம் எனச் சொல்லப்பட்டது. மோடியின் கனவுத் திட்டம் என்றழைக்கப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை முழுமையடைய செய்ய இன்னும் 2 ஆண்டுகளே உள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா, “பிரதமரின் திட்டத்தை நிறைவேற்ற இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், இத்திட்டத்தால் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவில்லை என்றும், இதன்மூலம் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமையை அகற்ற முடியவில்லை என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கழிவறைகள் கூட முறையாக சாக்கடைகளுடன் இணைக்கப்படவில்லை. எனவே, சுகாதாரம் இன்னும் மோசமடைந்துள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த கொடுமையான முறை இந்தியாவின் பல பகுதிகளில் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் இந்த வேலையை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக ஐநா மனித உரிமைகளுக்கான சிறப்பு நிருபர் லியோ ஹெல்லர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், கழிவறைகள் கட்டுவதால் மட்டும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்றும், இந்தக் கொடுமையை ஒழிக்க, மாற்று வழிகளை கையாள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.