இந்தியா

ராகுல் காந்தியை கங்கையில் குதிக்க சொன்ன உமா பாரதி

ராகுல் காந்தியை கங்கையில் குதிக்க சொன்ன உமா பாரதி

Rasus

கங்கை ஆற்றை சுத்தம் செய்யும் வாக்குறுதியை மோடி காப்பாற்றவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை கங்கையில் குதிக்குமாறு, பாஜக அமைச்சர் உமா பாரதி கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையென்றால் தான் கங்கையில் குதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது வாரணாசியில் பேசிய ராகுல் காந்தி, மோடி கங்கையை தாய் என்று அழைத்தார். கங்கையை சுத்தம் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். ஆனால் கங்கை சுத்தமாகவில்லை. அதற்கான வேலைகள் நடப்பதாகவும் தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, ராகுல் காந்தியை கங்கை ஆற்றிற்கு தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கங்கையை சுத்தம் செய்யும் வேலைகள் முழு வீச்சில் நடந்தால் ராகுல் கங்கையில் குதித்து விட வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் நான் கங்கையில் குதிக்க தயார் என்றும் கூறினார்.

கங்கையை சுத்தம் செய்யும் வேலைகள் நான்கு மாநிலங்களில் எந்த தொந்தரவும் இல்லாமல் நடப்பதாகவும், காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ள சமாஜ்வாதி கட்சி ஆளும் உத்தர பிரதேசத்தில் மட்டும் அந்த அரசாங்கம் சரியான ஒத்துழைப்பை தரவில்லை என்றும் உமா பாரதி குற்றம் சாட்டினார்.