இந்தியா

போர் பதற்றம் - உக்ரைனில் அமலாகிறது அவசர நிலை - துப்பாக்கி வைத்துக் கொள்ளவும் அனுமதி

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் முடிவெடுத்துள்ளது.

உக்ரைனின் 2 பகுதிகளை தன்னாட்சி பிராந்தியங்களாக ரஷ்யா அங்கீகரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்காக அவசர நிலையை கொண்டு வர, நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்சி டானிலோவ் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவசர நிலை அமலாக்கத்தை நாடாளுமன்றம் முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அவசர நிலை 30 நாள் முதல் 60 நாள் வரை அமலில் இருக்க வாய்ப்புள்ளது என்றும் ஒலெக்சி டானிலோவ் தெரிவித்தார். இதற்கிடையே, உக்ரைன் மக்கள் தற்காப்புக்காக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொள்ளவும் அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.