இந்தியா

மகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே !

மகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே !

jagadeesh

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இணைந்து ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு ஆதரவாக உள்ள 166 எம்எல்ஏக்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அவர்கள் அளித்தனர். 

இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர், உத்தவ் தாக்கரேவை முதல்வராக நியமிப்பதாகவும் 28-ம் தேதி மாலை 6.40 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாகவும் கடிதம் எழுதியுள்ளார்.முன்னதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டணிக்கு ‘மகா விகாஸ் அகாதி’ என பெயரிடப்பட்டுள்ளது‌. அடுத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு 3 கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஒருமனதாக தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கூட்டணி கட்சியினர் முன்னிலையில் பேசிய உத்தவ் தாக்ரே, மகாராஷ்டிரா முதலமைச்சராவேன் என்று கனவில் கூட நான் நினைத்ததில்லை என்றும், இத்தகைய வாய்ப்பு கிடைக்க உதவிய காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோருக்கு நன்றி எனவும் கூறினார்.30 ஆண்டுகளாக தங்கள் நண்பர்களாக இருந்தவர்கள் தங்களை நம்பவில்லை என்றும் ஆனால் 30 ஆண்டுகளாக எதிரணியில் இருந்தவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்தனர் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

முதல்வராக பதவியேற்ற பின் டெல்லி சென்று தனது மூத்த சகோதரரை போன்ற பிரதமர் மோடியை சந்திக்க போவதாகவும் தாக்கரே கூறினார். மகாராஷ்டிர தேர்தல் பரப்புரையின்போது உத்தவ் தாக்கரேவை தனது இளைய சகோதரர் போன்றவர் என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார் பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் தனது சித்தப்பாவுமான சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார்