இந்தியா

21 ஆண்டுகள் காத்திருந்து ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பழிதீர்த்த உதம் சிங்!

webteam

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறக்க முடியாத வடு என்றால் அது ஜாலியன்வாலா பாக் படுகொலை. 1919 ஆம் ஆண்டில் ரவுலட் என்ற அடக்குமுறைச் சட்டத்தை ஆங்கிலேய அரசு பிறப்பித்திருந்தது. இதன்படி யாரை வேண்டுமானாலும், காரணம் இன்றி கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதை போல, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது ஜெனரல் டயர் என்ற வெள்ளை அதிகாரி, பீரங்கி, துப்பாக்கி படைகளுடன் அங்கு வந்து அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டார். இந்த கொடூர வன்முறையில் 379 பேர் உயிழந்ததாக பிரிட்டீஷார் ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது. நிராயுதபாணியாக நின்ற மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தன் வீரத்தை காட்டியது ஆங்கிலேய அரசு. ஜாலியன்வாலா பாக் சம்பவத்துக்கு பிறகு இந்தியாவே வெகுண்டெழுந்தது. இந்தப் படுகொலையின் நூறாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நாளில் நினைவுகூறத்தக்க மற்றொரு விடுதலை போராட்ட வீரர் உதம் சிங். யார் இந்த உதம் சிங்?

1899ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிறந்தார் உதம் சிங். ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த கூட்டத்தில் 20 வயதான உதம் சிங்கும் பங்கேற்று இருந்தார். துப்பாக்கி குண்டுகள் வெடித்து சிதற உதம் சிங் ஓடித்தப்பினார். ஆனால் அவரது நண்பர்களையும் பெற்றோரையும் இழந்தார். தன் கண் எதிரே மக்களை சுட்டு வீழ்த்திய ஆங்கிலேயர் மைக்கேல் ஓ டயரை பழிவாங்க முடிவு செய்தார் உதம் சிங். ஆனால் அவர் அதற்காக பல வருடங்கள் காத்திருந்தார். ஜாலியன் சம்பவத்துக்கு பிறகு கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை விஷயமாகவும், இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும் பயணம் செய்தார். 

அமெரிக்காவில் பல இடங்களுக்கு பயணம் செய்த உதம், இந்திய சுதந்திரத்துக்காக ஆதரவு திரட்டிக்கொண்டு 1927ம் ஆண்டு இந்தியா திரும்பினார். அப்போது அவர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் 1931ம் ஆண்டு விடுதலையான அவர் ஜெர்மனிக்கு தப்பினார். அங்கிருந்து அவர் 1933ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். 

1940ம் ஆண்டு மார்ச்13ம் தேதி லண்டனின் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் உதம். அதே கூட்டத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை அரங்கேற்றிய மைக்கேக் ஓ டயரும் கலந்து கொண்டிருந்தார். கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் டயரை சுட்டுக்கொன்று ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிர்ப்பலிக்கு பழிவாங்கினார் உதம் சிங். 

''என் மக்களின் ஆன்மாவால் நான் நொறுங்கினேன். அதனால் நான் அவனை நொறுக்கினேன்'' என்று சொன்னார் உதம் சிங். டயரை பழிவாங்குவதற்காக நான் 21 ஆண்டுகள் காத்திருந்தேன் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த உதம் சிங், 4 மாதங்களுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார்.