இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மாநிலங்களை குற்றஞ்சாட்டிய பிரதமருக்கு உத்தவ் தாக்கரே பதில்

Sinekadhara

மாநில அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது என்ற பிரதமரின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறது மகாராஷ்டிரா அரசு.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை ஏற்றத்தை குறைக்க மாநில அரசுகள் தங்கள் வரியை குறைக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். மிக முக்கியமாக எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் இப்போது வரை பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி குறைக்கப்படவில்லை எனவும், குறிப்பாக மேற்கு வங்கம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையின் போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமருடைய பேச்சுக்கு விளக்கம் கொடுத்துள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்றைய தினம் 1 லிட்டர் டீசல் மீதான மாநில வரி என்பது 22.37 ரூபாய். ஆனால் மத்திய அரசின் டீசல் மீதான வரி என்பது 24.38 ரூபாயாக உள்ளதாகவும், எனவே மத்திய அரசின் வரியே அதிகம் என விளக்கம் அளித்துள்ளார். இதேபோல் பெட்ரோல் மீதான மாநில வரி 32.55 ரூபாயாகவும், பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி 31.58 ரூபாய் என தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் இயற்கை எரிவாயு ஊக்குவிக்கும் வகையில் 13.5%-லிருந்த வாட் வரி 3 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் மகாராஷ்டிர முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.