இந்தியா

உத்தவ் வீடு முன்பு போராட்டமா? பெண் எம்.பி.யை வீட்டுக்குள் முடக்கிய சிவசேனா தொண்டர்கள்?

ஜா. ஜாக்சன் சிங்

மகாராராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முன்பு அனுமன் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்துவதாக எச்சரித்த பெண் எம்.பி. நவ்னீத் ராணாவின் வீட்டை சிவசேனா தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி சுயேச்சை மக்களவை உறுப்பினராக இருப்பவர் நவ்னீத் ராணா. இவரது கணவர் ரவி ராணாவும் சுயேச்சை எம்எல்ஏ ஆவார். அமராவதி மாவட்டத்தில் இந்த எம்.பி. - எல்எல்ஏ தம்பதியருக்கு செல்வாக்கு அதிகம். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு எம்.பி. நவ்னீத் ராணா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "இந்துத்துவா கொள்கையை பேசி முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் உத்தவ் தாக்கரே, தற்போது அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கி விட்டார். அதனை நினைவூட்டுவதற்காக அவரது வீட்டின் முன்பு சனிக்கிழமை (இன்று) காலை 9 மணிக்கு அனுமன் கோஷத்தை ஒலிக்கவிடப் போகிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

இதற்கு சிவசேனா தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று அதிகாலைநவ்னீத் ராணாவும், ரவி ராணாவும் அமராவதியில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து சேர்ந்தனர். இதனை அறிந்த சிவசேனா தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் நவ்னீத் ராணாவின் வீட்டை முற்றுகையிட்டனர்.

photo courtesy - ET

சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், நவ்னீத் ராணா வீடு முன்பு இரும்பு தட்டிகளை வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து ராணா தம்பதி உடனடியாக அமராவதி செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்களின் வீட்டின் மது தாக்குதல் நடத்துவோம் எனும் சிவசேனா தொண்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து எம்எல்ஏ ரவி ராணா கூறுகையில், "அமைதி வழியில் போராட்டத்தை அறிவித்த எங்களை சிவசேனா அச்சுறுத்தி வருகிறது. இது ஜனநாயக விரோத செயல் ஆகும். அமராவதியில் உள்ள எங்கள் வீட்டின் முன்பும் சிவசேனா தொண்டர்கள் கூடியுள்ளனர். அங்கு எங்கள் பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.