இந்தியா

அதிருப்தி அமைச்சர்களின் பதவியை பறித்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே!

ச. முத்துகிருஷ்ணன்

மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி முகாமில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் பதவிகளை பறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், பல எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அதிருப்தி முகாமில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் நடவடிக்கை ஒன்றை அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எடுத்துள்ளார். அதிருப்தி முகாமில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே உட்பட 9 அமைச்சர்களின் பதவியை பறித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர்கள் வகித்து வந்த இலாகாக்கள் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களிடம் கூடுதலாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் இல்லாததால் நிர்வாகப்பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

5 கேபினெட் அமைச்சர்கள் மற்றும் 4 இராஜாங்க அமைச்சர்களின் இலாகாக்களை மற்ற அமைச்சர்களிடம் ஒப்படைத்து அவர் உத்தரவிட்டார்.

அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்கள்:

1. ஏக்நாத் ஷிண்டேவின் நகர்ப்புற வளர்ச்சி, பொதுப்பணி (பொது நிறுவனங்கள்) துறை சுபாஷ் தேசாய் வசம் ஒப்படைக்கப்பட்டது.

2. குலாப்ராவ் ரகுநாத் பாட்டீலின் நீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறை அனில் தத்தாத்ரயா பராப்பிற்கு வழங்கப்பட்டது.

3. தாதா பூஸின் விவசாயம் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை சங்கர் யஷ்வந்த்ராவ் கடாக்கிற்கு வழங்கப்பட்டது.

4. சந்தீபன் ஆசாராம் பூமாரேவின் வேலைவாய்ப்பு உத்தரவாதம் துறை சங்கர் யஷ்வந்த்ராவ் கடாக்கிற்கு வழங்கப்பட்டது.

5. உதய் சமந்த் வசமிருந்த உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை ஆதித்ய தாக்கரே வசம் ஒப்படைக்கப்பட்டது.