அம்பதாஸ் தன்வே ani
இந்தியா

'ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம்' |காவல் துறைக்கு தொடர்பு என குற்றஞ்சாட்டிய உத்தவ் தரப்பு எம்.எல்.ஏ.!

மகாராஷ்டிரா சட்டமன்றக் குழுவின் எதிர்க்கட்சித் தலைவர் அம்பதாஸ் தன்வே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சில நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Prakash J

18வது ஐபிஎல் சீசன் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், அதைப் பற்றிய பேச்சுகளும் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் பந்தயம் கட்டுவது தொடர்பான பேச்சுகள் தற்போது புயலைக் கிளப்பியுள்ளன. அந்த வகையில், மகாராஷ்டிரா சட்டமன்றக் குழுவின் எதிர்க்கட்சித் தலைவர் அம்பதாஸ் தன்வே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சில நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், "கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்ட பயன்படுத்தப்படும் 'லோட்டஸ் 24' என்ற செயலியின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் அடங்கிய பென் டிரைவ் என்னிடம் உள்ளது. மெஹுல் ஜெயின், கமலேஷ் ஜெயின் மற்றும் ஹிரென் ஜெயின் ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் மும்பை காவல் துறையின் மூத்த காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். மும்பை காவல் துறையின் பாதுகாப்பின்கீழ் பந்தய நடவடிக்கைகள் நடைபெறுகின்றன" என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அதுதொடர்பான விவரங்கள் அடங்கிய பென் டிரைவை கவுன்சில் தலைவரிடம் சமர்பிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்பதாஸ் தன்வே

தொடர்ந்து அவர், “கடந்த ஆண்டு, மாநிலத்தில் 7,982 பாலியல் வன்கொடுமைகளும் 16,200 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு, தினமும் 22 பாலியல் வன்கொடுமைகளும் 45 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன. இது ஏன் பரவலாகிறது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குற்றப் புள்ளிவிவரங்கள் குறித்து கவலைகள் எழுப்பிய அவர், ”2024ஆம் ஆண்டில் 7,82,960 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. ஆனால், 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான குற்ற அறிக்கைகளை மகாராஷ்டிர அரசு வேண்டுமென்றே மறைத்துள்ளது. குற்றவாளிகளைத் தண்டிப்பதில் அரசு ஆர்வம் காட்டாததால் குற்றங்கள் அதிகரித்துள்ளது” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.