இந்தியா

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் கோதுமைப் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த UAE

சங்கீதா

இந்தியாவில் இருந்து வரும் கோதுமை, கோதுமை மாவு மற்றும் கோதுமை தொடர்பான பொருள்களை ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்ய நான்கு மாத காலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் பொருளாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 13-ம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது மறுஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். உரிய அனுமதி கிடைத்தப் பிறகு மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மற்றும் கோதுமை மாவை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு, இந்த கோதுமை ஏற்றுமதி தடை முடிவை எடுத்திருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அமீரகத்தையும், இந்தியாவையும் இணைக்கும் திடமான உறவுகளைப் பாராட்டும் வகையிலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மே 13 அன்று கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததும், அதற்கு பல நாடுகள் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.