flight accident X
இந்தியா

வெடித்து சிதறிய விமான டயர்! தரையிறங்கும்போது நடந்த கொடூரம்! 41 பேருக்கு நடந்தது என்ன?

இந்தியாவில் நடந்த விமான விபத்து ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

உலகிலேயே அதிக கட்டணங்களை கொண்ட போக்குவரத்து சேவை என்றால் அது விமான பயணம் தான். எந்த அளவுக்கு சொகுசான வசதிகளை விமான சேவை கொண்டிருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்துகளையும் கொண்டுள்ளதே. ஒரு சிறு விஷயம் தவறானாலும் விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கே ஆபத்து வந்துவிடும்.

இவ்வாறு பல்வேறு சவால்கள் இருப்பதால் அதிக கட்டணங்களை வசூலிக்கும் விமான நிறுவனங்கள், அதற்கு ஏற்ப பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி வைக்க வேண்டியது அவர்களது கடமை. ஆனால், பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை என்றே பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

flight

இப்படியான சூழலில், டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் விமான நிலையத்திற்கு, அலையன்ஸ் ஏர் விமானம் இன்று வந்துள்ளது. 37 பயணிகளுடனும், 4 விமானக் குழுவினருடனும் இன்று காலை தரையிறங்கியபோது, விமானத்தின் இடது பக்க டயர்கள் ஓடுதளத்தில் வெடித்து சிதறியுள்ளன. சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலைய ஊழியர்களும் விமான நிறுவன அதிகாரிகளும் இணைந்து பயணிகள் அனைவரையும் ஓடுதளத்தில் இருந்து விமான நிலைய முனையத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதனால் பழுதடைந்த விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டு, பிலாஸ்பூரிலிருந்து அந்த விமானம் மேற்கொள்ளவிருந்த அடுத்தக்கட்டப் பயணம் ரத்து செய்யப்பட்டது. டயர் வெடித்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

flight

டயர்களின் தரம் குறைந்து போனால், ஓடுதளத்தில் ஏதாவது கூர்மையான பொருட்கள் இருந்தால், டயரில் காற்றழுத்தம் சரியான அளவில் இல்லாமல் இருந்தால், விமானம் தரையிறங்கிய பின் வேகத்தைக் கட்டுப்படுத்த திடீரென பிரேக் பிடித்தால் டயர் வெடிக்க வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, ஏர் இந்தியாவின் விமானமும், இண்டிகோ விமானமும் விபத்தில் சிக்கி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.