திருநங்கை சபி கிரி மீண்டும் கடற்படை வேலையில் சேர்வதற்கு கடற்படை சம்மதம் தெரிவித்துள்ளது.
27 வயதாகும் திருநங்கை சபி கிரி என்பவர் தனது 18 வது வயதில் கடற்படையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது ஆணாக இருந்த அவர், சில வருடங்களுக்கு பிறகு தன்னை பெண்ணாக உணர்ந்துள்ளார். இதனால் 2016 ஆம் ஆண்டு 22 நாட்கள் விடுப்பில் மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
சபி கிரி முன்னதாக விசாகப்பட்டினம் கடற்படையில் பொறியியல் பிரிவில் வேலை பார்த்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு நிர்வாகப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடற்படை பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். கடற்படை விதிமுறைகளின் படி பெண்கள் படை வீரராக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையானது. சபிகிரி தற்போது திருநங்கை சமூகத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நீக்கம் செய்யப்பட்டு 2 வருடத்திற்கு பிறகு, சபி கிரி மீண்டும் கடற்படையில் சேர்வதற்கு கடற்படை சம்மதம் தெரிவித்துள்ளது. தேர்வு ஒன்றில் சபிகிரி வெற்றி பெற்றால் நவம்பர் மாதம் முதல் ஒரு கீழ் பிரிவு எழுத்தாளராக வேலை பார்ப்பதற்கு கடற்படை ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சபி கிரி மீண்டும் கப்பலுக்கு செல்ல முடியாது. ஆனால் தேர்வில் வெற்றி பெற்றால் கிளார்க் லெவல் பணிகளுக்கு செல்ல முடியும். நான் உறுதியாக கூறுகிறேன். அவர் தேர்வில் வெற்றி பெற்று மீண்டும் பணியில் சேருவார் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து சபிகிரி கூறுகையில், “எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் ஒரு படை வீரராக செயல்பட முடியாது. ஆனால் வேலைக்கு சேரும்பட்சத்தில் எனது சம்பளத்தையும் எல்லா வகையான பயன்களையுமாவது பெற முடியும்” எனத் தெரிவித்தார்.