இந்தியா

ஜனவரி 21 முதல் இரண்டு வாரம்: 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படும் - கேரள அரசு

kaleelrahman

கேரளாவில் 1 முதல் 9 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஜனவரி 21 முதல் பள்ளிகள் மூடப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக தினசரி தொற்று 18 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில் முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 1 முதல் 9; வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு வரும் 21ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு வாரங்களுக்குப் பின்பு நோய்த் தொற்று; அடிப்படையில் வகுப்புகள் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடக்கும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல கர்ப்பிணி அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் அமல்படுத்துவது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 17-ஆம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.