ஸ்ரீநகர்- வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.பயீன் பகுதியில் இராணுவ வாகனம் ஆழமான பள்ளத்தாக்கில் இன்று விழுந்ததில் இரண்டு வீரர்கள் இறந்தனர், மேலும், மூன்று பேர் படுகாயமும் இரண்டு பேர் காயம் எதுவுமின்றி தப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பந்திபோரா-ஸ்ரீநகர் சாலையில் எஸ்.கே.பயீன் அருகே இராணுவ வீரர்கள் சென்ற வாகனம் திடீரென்று சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது
இந்த சம்பவத்தில் ஐந்து வீரர்கள் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் உடனடியாக பந்திபோரா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு இருவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் KNO தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த மூன்று ராணுவ வீரர்கள் மேம்பட்ட சிகிச்சைக்காக ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கடந்த இரு மாதங்களில் நடந்த விபத்து
ஸ்ரீ நகரில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளாவது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று, பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் 350 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து வீரர்கள் இறந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இதேபோல், நவம்பர் 4 அன்று, ரஜோரி மாவட்டத்தில் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு ராணுவ வீரர் இறந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.
நவம்பர் 2, அன்று ரியாசி மாவட்டத்தில் ஒரு மலைப்பாங்கான சாலையில் இருந்து கார் சறுக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 10 மாத மகன் உட்பட மூன்று பேர் இறந்தனர் மற்றும் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.