144 தடை உத்தரவை மீறியது மட்டுமில்லாமல் போலீசாரையும் தாக்கிய இருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்
கேரள மாநிலம் வழக்குளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நிஷாத் (20) மற்றும் நிஷாடி (22) ஆகிய இருவரும் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சாலையில் அதிவேகமாகச் சென்ற இருவரையும் காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.
இதனால் போலீசாரிடம் கோபமடைந்த இளைஞர்கள் இருவரும் காவலரைத் தாக்கியுள்ளனர். காவலரின் சீருடையை கிழித்து அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். இதில் லேசான காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சகோதரர்கள் இருவரையும் எர்ணாகுளம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த போலீஸ் அதிகாரி, காவல் அதிகாரியை பணியை செய்யவிடாமல் தாக்கியது, உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ காரணமாக இருந்தது என இரண்டு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கேரளாவில் வேகமாக கொரோனா பரவி வருவதால் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முன்னதாகவே 144 தடையை மாநில அரசு அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.