விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள பரவாட பகுதியில் செயல்படும் சாய்னார் லைப்சயின்ஸ் பார்மா தொழிற்சாலையில் இன்று காலை பெஞ்சிமிடோசோல் என்ற விஷவாயு கசிவு ஏற்பட்டு தொழிற்சாலையில் வேலை செய்யும் நரேந்திரா, கவுரி சங்கர் ஆகிய ஊழியர்கள் உயிரிழந்தனர். அப்போது தொழிற்சாலையில் 30 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், ஆறு ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்.
அவர்களில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஷவாயு கசிவு பற்றிய தகவல் அறிந்த விசாகப்பட்டினம் மாவட்ட உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.
தற்போது அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்ஜி பாலிமர் தொழிற்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட விஷவாயு கசிவு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய் ஆக்ரோ இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.