இந்தியா

பசிக் கொடுமையால் மண்ணை தின்ற குழந்தைகள் உயிரிழப்பு.. ஆந்திராவில் சோகம்..!

Rasus

பசிக் கொடுமையால் அடிக்கடி மண்ணை தின்று வந்து குழந்தைகள் இரண்டு பேர் ஆந்திராவில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த தம்பதியினர் மகேஷ்- நீலவேணி. வயிற்று பிழைப்புக்காக தங்களது 6 குழந்தைகளுடன் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். நீலவேணியின் சகோதரி மகளான வெண்ணிலாவையும் அத்தம்பதியினர் தான் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வெண்ணிலா பசிக்கொடுமையால் சாப்பாடு இல்லாமல் அடிக்கடி மண்ணை அள்ளி தின்றதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக தம்பதியினரின் மகனான சந்தோஷ், சாப்பாடு இல்லாமல் பசிக்கொடுமையால் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இரண்டு குழந்தைகளும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்.

மகேஷ்- மற்றும் நீலவேணி மதுபோதைக்கு அடிமையானவர்களாக இருந்துள்ளனர். அதனால் தாங்கள் சம்பாதிக்கும் சிறு பணத்தையும் குடிப்பதற்கே செலவிட்டுள்ளனர். அத்துடன் குழந்தைகளின் பசியையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உள்ளூர் அதிகாரிகள், மற்ற 4 குழந்தைகளையும் உடடினயாக மீட்டு அரசு சார்பில் நடத்தப்படும் சிறுவர்களுக்கான காப்பகத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் தம்பதியினரை மதுபோதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இதுகுறித்து கூறும்போது, “ அவர்களுக்கு எந்தவசதியும் இல்லை. வாழ்வாதாரமும் இல்லை. நிறைய நேரங்களில் சாப்பாடு இல்லாமல் இருப்பார்கள். யாராவது தான் ஏதாவது சாப்பிட கொடுப்பார்கள். ஆனாலும் அது போதுமானதாக இருக்காது. தம்பதியினருக்கு ஆதார் கார்டு வழங்கப்படாததால் ரேஷன் கார்டும் இல்லை. இதனால் சிரமத்திற்கு ஆளாகினர்” எனத் தெரிவித்துள்ளனர்.