யுபிஎஸ்சி தேர்வு
யுபிஎஸ்சி தேர்வு twitter page
இந்தியா

ஒரே தேர்வு எண்ணில் 2 பேர் தேர்ச்சியா?! - சட்ட நடவடிக்கை பாயும் என யுபிஎஸ்சி அறிவிப்பு

Prakash J

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், ஒரே தேர்வு எண்ணில் இரண்டு பெண்கள் தேர்ச்சி பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, உண்மையிலேயே தேர்ச்சி பெற்ற இரண்டு நபர்களின் பெயர்களைப் போன்றே அவர்களின் பெயர்களும் இருந்ததால் அந்தப் பெயர்களை காட்டி அது தாங்கள்தான் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா பாத்திமா. இவர், 7811744 பதிவு எண்ணில் தேர்வு எழுதி, தரவரிசை பட்டியலில் 184வது இடம்பிடித்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், அதேபதிவு எண்ணில் அலிராஜ்பூரைச் சேர்ந்த ஆயிஷா மக்ரானி என்பவரும் தேர்ச்சி பெற்றிருந்ததாக செய்தி வெளியாகி இருந்தது. இவர்களில் உண்மையிலேயே வெற்றிபெற்றது யார் என குழப்பம் ஏற்பட்டது. அதாவது இருவருடைய பெயரும் ஆயிஷா என ஆரம்பித்ததால் இந்த பிரச்னை ஏற்பட்டது. இதனால், யுபிஎஸ்சி தேர்வு முறையில் குளறுபடி நடந்திருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்தது. இதுதொடர்பாக இரண்டு பெண்களும், தனித்தனியே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதேபோல், துஷார்குமார் என்ற பெயரில் பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு பேர் தெர்வெழுதி இருந்தனர். அவர்கள் இருவரும் 44வது தரவரிசையில் வெற்றி பெற்றதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் யுபிஎஸ்சி நிர்வாகம், ஆவணங்களைச் சரிபார்த்ததில் ஆயிஷா மக்ரானி, பீகார் துஷார் ஆகிய இருவரும் தேர்வாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வானதாகக் கூறப்படும் இரண்டு நபர்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்வானதாக இருவரும் கூறியது உண்மையல்ல. அவர்கள் தங்களுக்குச் சாதகமாக போலியான ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம், ஆயிஷா மக்ரானி மற்றும் துஷார் இருவரும் சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டுள்ளனர். எனவே, தேர்வு விதிகளின்படி, அவர்களின் மோசடி செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க யுபிஎஸ்சி பரிசீலித்து வருகிறது. யுபிஎஸ்சியின் கட்டமைப்பு வலுவானது மற்றும் முறைகேடாக பயன்படுத்த முடியாது. எனவே அத்தகைய தவறுகள் நடக்க சாத்தியமில்லை” என யுபிஎஸ்சி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.