அரசாங்க ஊழியர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக போலீசாரின் வலையில் சிக்காமல் இருக்க இருப்பிடங்களை மாற்றிய அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த அரசாங்க ஊழியரான சுரேந்தர் குமார் என்பவரை கடந்த 2013-ஆம் ஆண்டு மோனிகா தியாகி என்ற பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு சுற்றுலா வசதியை ஏற்பாடு செய்து தரும் நிறுவனத்தில் தான் வேலைபார்ப்பதாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை நம்பிய சுரேந்தர் குமார், தனது குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீர் செல்வதற்காக அப்பெண்ணிடம் பணம் கொடுத்திருக்கிறார். ஆனால் சொன்னபடி அந்த நிறுவனம் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. தொடர்ந்து விசாரித்தபோது அப்படியொரு நிறுவனமே இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து அவர் 2013-ஆம் ஆண்டே போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டபோது, சுரேந்தர் குமாரை போன்று பல அரசாங்க ஊழியர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. கிட்டத்தட்ட 350 ஊழியர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். ஆனால் அவர்கள் போலீசாரின் வலையில் சிக்காமல் இருக்க தங்களது இருப்பிடங்களை மாற்றி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அஷ்வனி சிங், ஹர்பத் சிங் ஆகியோர் அவர்களின் பெயர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.