இந்தியா

பாஜக ஆதரவாளர்களால் ரேட்டிங் குறைந்த சுஷ்மா !

பாஜக ஆதரவாளர்களால் ரேட்டிங் குறைந்த சுஷ்மா !

webteam

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை பாஜக ஆதரவாளர்கள்  சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த முகமது அனஸ் சித்திக் என்பவருக்கும் இந்து மதத்தை சேர்ந்த தன்வி செத் என்பவருக்கும் கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர்கள் நொய்டாவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் தம்பதியினர் பாஸ்போர்ட் வேண்டி லக்னோவிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.

பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக லக்னோவிலுள்ள அலுவலகத்திற்கு தன்வி சென்றுள்ளார். அங்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் பாஸ்போர்ட்டில் சிக்கல் உள்ளதாக பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ரா கூறியிருக்கிறார். மேலும், மிகவும் கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தன்வி தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இதை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தன்வி டேக் செய்தார். அதேபோல், இமெயில் மூலமும் அனுப்பினார். இதனையடுத்து அவர்களுக்குப் பாஸ்போர்ட் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் சமந்தப்பட்ட விகாஸ் மிஸ்ரா என்ற அதிகாரியும் இடமாற்றப்பட்டார். 

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் “ ஜூன் 17 முதல் 23 வரை நான் வெளிநாட்டில் இருந்தேன். நான் இல்லாதபோது, என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனாலும், என்னைப் போற்றி சில ட்வீட்கள் வந்துள்ளன. உங்களிடம் அதனை பகிர்ந்துகொள்கிறேன்'' என பதிவிட்டிருந்தார்.

அதில் கேப்டன் சர்பஜித் என்பவர்  “சுஷ்மா கிட்டத்தட்ட இறந்துவிட்டார். வேறு ஒருவரிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட சிறுநீரகத்தால் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எந்த நேரத்திலும் அது நின்று போகலாம்” எனப் பதிவிட்டுள்ளார். 

இந்திரா என்பவர்  “சுஷ்மா எடுத்த இந்த முடிவு இஸ்லாமிய சிறுநீரகத்தின் விளைவா ' எனப் பதிவிட்டுள்ளார். 

ராபின் என்பவர்  “ சுஷ்மாவின் சீறுநீரகம் செயலிழக்க ஆண்டவனிடம் பிராத்திக்கிறேன்” இது போன்று பலர் ட்விட்டரில் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சுஷ்மாக்கு பாராட்டுகளும் கண்டனங்களும் குவிந்து வருகிறது. சிலர் பாஸ்போர்ட் அதிகாரி விகாஸ் மிஸ்ராவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். பாஜகவினர் சுஷ்மாவின் ஃபேஸ்புக்கிற்கு குறைவான ரேட்டிங் அளித்து வருகின்றனர். இதன்காரணமாக சுஷ்மாவின் ஃபேஸ்புக் ரேட்டிங் 1.4 ஆக மாறியுள்ளது. 4.3ஆக இருந்த ஃபேஸ்புக் ரேட்டிங் தற்போது குறைந்துள்ளது.