இந்தியா

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு

நிவேதா ஜெகராஜா

முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு, கடந்த வாரம் சனிக்கிழமை, ட்விட்டர் நிறுவனத்தால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. இந்த முடக்கத்தை, ட்விட்டர் நிறுவனம் இன்று விடுவித்துள்ளது. ராகுல் காந்தியுடன், இன்னும் சில காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டிருந்தது. அவையும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸின் சமூக ஊடக கணக்குகளை நிர்வகிக்கும் ரோஹன் குப்தா என்பவர், என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் "காங்கிரஸ் தலைவர்கள் அனைவரின் ட்விட்டர் கணக்குகளும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. கணக்குகள் பயன்பாட்டுக்கு வந்ததன் பின்னணி குறித்து, ட்விட்டர் எந்தவித காரணத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வ காங்கிரஸ் பக்கத்தில், முடக்கத்திலிருந்து மீட்கப்பட்டதை முன்னிறுத்தி 'சத்யமேவ ஜெயதே' என பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக அக்கணக்குகள் முடக்கப்பட்டபோது, அதன் பின்னணியாக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது காரணமாக சொல்லப்பட்டிருந்தது. அப்படத்தை முதலில் பகிர்ந்தது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திதான்.

ட்விட்டரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, நேற்றைய தினம் தனது யூட்யூப் பக்கத்தில் 'ட்விட்டரின் ஆபத்தான விளையாட்டு' என்ற தலைப்பின் கீழ் வீடியோ வெளியிட்டிருந்தார் ராகுல். அதில், "ஒரு நிறுவனம் இப்படி நமக்கான அரசியலை வரையறுத்து, அதன் மூலம் தனது வணிகத்தை செய்கிறது என்பதை, ஒரு அரசியல்வாதியாக நான் விரும்பவில்லை. இது, இந்தியாவின் ஜனநாயகத்தின்மீது தொடுக்கப்பட்ட வன்முறையாகவே பார்க்கிறேன். ட்விட்டர் நடவடிக்கை நியாயமற்றது; மேலும், தாங்கள் ஒரு நடுநிலையான தளம் என்ற எண்ணத்திலிருந்தும் ட்விட்டர் நிறுவனம் விலகியிருக்கின்றது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.